சர்க்கரைநோய்
சர்க்கரை நோய்
இது ஒரு நோயல்ல... குறைபாடு. கணையத்தின் பீட்டா செல்களால் இன்சுலினை சுரக்க முடியாமல் போகும்போது ரத்தத்தில் சேரும் குளூக்கோஸின் அளவு கூடும். இதைத்தான் `டயாபடீஸ்’ என ஆங்கிலத்திலும் `சர்க்கரைநோய்’ எனத் தமிழிலும் சொல்கிறோம்.
மற்ற நாடுகளில் 55 வயதிலும், இந்தியாவில் 40 வயதிலும் இந்த நோயால் பாதிக்கப்படுகிறார்கள்’ என்கின்றன ஆய்வுகள். சர்க்கரைநோய், உடலுக்குப் பலவிதமான நோய்களைக் கொண்டுவந்து சேர்க்கும் நுழைவாயில்.
இதயநோய், சிறுநீரகக் கோளாறு, பக்கவாதம்... என ஒரு பெரும் பட்டியலே உண்டு.
வகைகள்
டைப் 1 சர்க்கரைநோய்: சிறு வயதிலேயே ஏற்படும் இவ்வகையில், கணையத்தால் இன்சுலினைச் சுரக்க முடிவதில்லை. எனவே, உடலுக்குத் தேவையான இன்சுலினை வெளியே இருந்து உடலுக்குள் செலுத்தவேண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறது. இதனால் மாத்திரைகளுடன் ஊசி மருந்தும் கட்டாயமாக்கப்படும். இவ்வகை சர்க்கரைநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகள், குறைவான எடையுள்ளவர்களாக இருப்பார்கள்.
டைப் 2 சர்க்கரைநோய்: பெரியவர்களுக்கு ஏற்படும் இந்த வகையில் இன்சுலின் சுரப்பு இருந்தாலும், மிக மெதுவாகத்தான் தன் பணியைச் செய்யும். எனவேதான் மாத்திரைகளுடன் உடற்பயிற்சி செய்யவேண்டியிருக்கும். உணவுப் பழக்கத்தில் கட்டுப்பாடு தேவைப்படும். இந்த வகை டயபடீஸால் பாதிக்கப்பட்டவர்கள் அதிக உடல் எடையுடன் இருப்பார்கள்.
காரணங்கள்
1.(Acute stress): மனஅழுத்தம் 2.ஹார்மோன் சமநிலையைப் பாதிப்பதால், 3.இன்சுலின் பணி மந்தமடையும்.
உணவு: உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் பதப்படுத்தப்பட்ட உணவுகள், துரித உணவுகளை அதிகமாகச் சாப்பிடுபவர்களுக்கும், உடல்பருமன் அதிகரித்து அதை கவனத்தில்கொள்ளாமல் இருப்பவர்களுக்கும் சர்க்கரைநோய் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
பரம்பரை: பரம்பரையில் யாருக்காவது சர்க்கரைநோய் இருந்தால், தலைமுறைப் பண்புகளைக் கொண்டு செல்லும் ஜீன்கள் டைப்-2 டயாபடீஸை உருவாக்கும். அதிகக் குழந்தைகளைப் பெற்ற பெண்கள், அவர்களின் வயதான காலத்தில் டைப்-2 டயாபடீஸால் பாதிக்கப்படுவார்கள்.
தொற்று: சில சமயங்களில் காயங்களாலோ, அறுவைசிகிச்சையின்போதோ ஏற்படும் தொற்றுகள் ஹார்மோன்களைப் பாதிப்பதால், சுரப்பிகளின் பணி நின்றுபோகும். டைப் 1 சர்க்கரைநோயை ஏற்படுத்தும் இந்த வைரஸ்கள், நோய் எதிர்ப்புச் சக்தியை பாதித்து, இன்சுலினைச் சுரக்கும் கணையத்தின் (பான்கிரியாஸ்) செல்களை அழிக்கக்கூடியவை.
வயது: பொதுவாக நடுவயதினரை இது தாக்கும்.
அதீதக் கொழுப்பு: உடல்பருமனால் இடுப்பைச் சுற்றிச் சேரும் அதிகக் கொழுப்பு, இன்சுலினின் பணியை முடக்கும்.
கர்ப்பகாலம்: இந்தச் சமயத்தில் பிளசென்ட்டாவின் ஹார்மோன்களால் இன்சுலின் அளவு கூடும். இதனால் டயாபடீஸ் ஏற்படும்.
அறிகுறிகள்...
* அதிக தாகம்
* அதிகப் பசி
* அடிக்கடி சிறுநீர் கழித்தல்
* மங்கும் பார்வைத்திறன்
* எடை கூடுதல் அல்லது குறைதல்
* புண்கள் ஆறும் தன்மை குறைதல்
* தோல் அரிப்பு
* சிறுநீர்த் தொற்று
* நீர்ச் சமநிலைக் குறைபாடு
கண்டறியும் முறைகள்
சிறுநீரகப் பரிசோதனை: வெறும் வயிற்றிலும் சாப்பிட்ட பின்னரும் இரண்டு மணி நேரம் கழித்து சிறுநீர் சாம்பிள் எடுக்கப்பட்டு டெஸ்ட் செய்யப்படும். இது நோயின் தாக்கத்தைப் பொறுத்து `+’ முதல் `+ + + +’ வரை என குறிப்பிடப்படும்.
ரத்தப் பரிசோதனை: இதன் சாம்பிளும் வெறும் வயிற்றிலும், காலை உணவுக்குப் பின்னரும் இரண்டு மணி நேரம் கழித்து எடுக்கப்பட்டு டெஸ்ட் செய்யப்படும். இதில் கணக்கிடப்படும் அளவு 110 mg/dl - 180 mg/dl-க்கு அதிகமாக இருந்தால் `டயாபடீஸ்’ என்கிறார்கள்.
HbA1C டெஸ்ட்: இதுவும் ஒரு ரத்தப் பரிசோதனைதான். இதன் மதிப்பு 7 அல்லது 7-க்கு கீழே இருந்தால் நார்மல். உடலின் சுகர் கட்டுப்பாட்டு திறனை அறிய உதவுகிறது.
Comments
Post a Comment